ஞாயிறு, 9 மார்ச், 2014

அமைதி, மௌனம், பெட்ரோல் வாசமில்லாத காற்று, மலை ஊற்றில் சுரக்கும் தண்ணீர், பச்சை..பச்சை..பச்சை.. இன்னும் யாரும் எழுதாத கவிதைகள், தலை தொடும் மேகம், கொண்டைஊசி வளைவுகளில் கதவு திறந்து காத்திருக்கும் மரணம், விரல்களை விறைக்க வைக்கும் குளிர், இன்னு
ம் அண்மிக்கும் விமானமும், அதன் சத்தமும், திடீர் மழை, மழைக்குப் பின் உடன் வெயில், பிடிப்பில்லாமல் தொங்கும் வானவில், பள்ளிவரை நான்கு கிலோமீட்டர் நடைபயணம், அப்போது பாதையெங்கும் பூத்திருக்கும் தொட்டாச்சிணுங்கிப் பூக்கள், பாதை முழுக்க மனித சஞ்சாரமே இல்லாத தனிமை, எங்கோ திடீரெனக் கேட்கும் நாயின் அலறல், அப்போது கொத்தித் தின்னும் பயத்தின் பற்கள், சாலையில் செத்துப்போய் அப்பியிருக்கும் பாம்புக்குட்டிகள், யூகலிப்டஸ் மர வாசனை, அதன் இலைகள் பறித்து முகர்ந்து திளைக்கும் ஏகாந்தம், புல்லாங்குழலாகாமல் தப்பித்த மூங்கில்கள், கால்களைக் கவ்விக்கொள்ளும் வரப்புச் சேறு, கோலிகுண்டு போல் உருண்டு கொண்டு தன்னைக் காத்துக்கொள்ளும் தொப்பளான் பூச்சி, எதிரில் இருப்பவர் முகத்தைக் காட்டாத பனிக்காடு, அத்தனைக் குளிரிலும், சில்லென்ற நீரில் ஐந்துமணி குளியல், பனிக்காலங்களில் உதடுவெடித்த காயங்கள், மழைக்கால இருமல், ஆள்தெரியாத பனிக்காட்டில் கிரிக்கெட் விளையாட்டு, பேருந்துக்கான காத்திருப்பில் தொலையும் நேரங்கள், பார்க்கவே அறுவெறுக்கும் புழுக்களை அவதானித்தல், செல்போனை சாகடித்துவிடும் சந்தோஷம், பெயர் தெரியாத பல பறவைகளின் குறுக்கீடுகள், சற்றே பெரிதாகத் தெரியும் பூர்ணிமை நிலவு, இரவுக்குளிரில் உடல் சூட்டை உணரும் உன்னதம், காய்கறிகளையேத் தின்று கொழுத்த இசு குட்டிகள்(பன்றி குட்டிகள்), இப்போதும் ஒலிபெருக்கியில் அவ்வப்போது ஒலிக்கும் ஒப்பாரி பாடல்கள், காபி குவளையிலிருந்து எழும் புகை போல் ஏரி நீரில் அதிகாலையில் எழும் பனிப்புகை, யாருமில்லாமல் அசைந்தபடியே இருக்கும் கட்டி வைத்த படகு, வாரம் ஐந்து நாட்களின் நகரத்து அழுக்கு சுமந்துவரும் என்னை, இரண்டு நாட்கள் சுத்தமாக்கி அனுப்பி வைக்கும் கொல்லிமலை. நகரத்தில் இல்லாதது எல்லாம் கொல்லிமலையில் இருக்கின்றன

கருத்துகள் இல்லை: